செனனை: இன்று 69வது பிறந்தநாள் காணும் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் மனைவி, மகன், மகள் மற்றும் மருமகனுடன்  கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். இதை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை, அவரது   ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் வீட்டில்  புத்தாடை அணிந்து தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவருக்கு  மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  சகோதரிகள் செல்வி கனிமொழி, சகோதரர் தமிழரசு ஆகியோரும் குடும்பத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து  தனது இல்லத்தில் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின்  கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து,  காலை ஏழரை  மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.   அப்போது அவர் எழுதிய ’உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து வணங்கினார். அதன்பின்னர் அந்த வளாகத்தில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பூக்கள் தூவி வணங்கினார்.   தான் எழுதிய சுயசரிதை புத்தகம் ’உங்களில் ஒருவன்’ புத்தகத்தை கருணாநிதி நினைவிடத்திலும் வைத்து வழங்கினார். தொடர்ந்து. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார்.  பெரியார் திடலில் முதல்வர் ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வாசலில் நின்று மு. க. ஸ்டாலினை வரவேற்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.  அதன்பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் ஸ்டாலின். கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.  அங்கிருந்து நேராக சிஐடி காலனிக்கு சென்று  ராஜாத்தி அம்மாள் இடம் வாழ்த்து பெற்றார்.