சென்னை: நாளை தொடங்க உள்ள பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட்டியுள்ளார். அதில், நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்க வாழ்த்தி உள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித் தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர். தேர்வுக்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மின்வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
“நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!” என்று தெரிவித்துள்ளார்.