சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (18ந்தேதி) மீண்டும் டெல்லி பயணமாகிறார். அப்போது மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக ஜூன் 17ந்தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து தேவைகள் , செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார்.
இந்த நிலையில், நாளை மறுதினம் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணமாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது அணை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (Gajendra Singh Shekhawat ) கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். தொடர்ந்து, டெல்லியில், மேகதாது அணை விவகாரத்தில் 4 மாநில முதல்வர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அன்றைய தினம் மேகதாது விவகாரத்தில், 4 தென்மாநில முதல்வர்களுடன் மத்தியஅரசு மத்தியஸ்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மத்தியஅரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.