சென்னை:  சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில்  கவர்னர்  ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர்.

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி  இன்று மாலை அளித்த  தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால், காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. முதலமைச்சரை ஆளுநர் எழுந்து வந்து வரவேற்று நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த தேநீர் விருந்தில்,  மற்ற கட்சகிளான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் , தேமுதிக தலைவர் பிரேமலதா, சுதீஷ் மற்றும் சிலர், முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர் செல்வம் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள்  தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக  ஆளுநர்  அளி்க்கும்  தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர்  பாரதி கூறியிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர்  பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்க்ள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின்,  சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.