சென்னை: செப்.4-ம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள வளாகம் கடுமையான இடநெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இதனால்,  புதிதாக நீதிமன்ற வளாகம் பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் கட்டிடம்  கட்டப்பட உள்ளது. இதில்,  கட்டுமான பணிகள் முடிந்ததும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ், சிட்டி சிவில் கோர்ட் குடும்ப நில நீதிமன்றங்கள்  அங்கு மாற்ற திட்டமிடப்பட்ட உள்ளது.

இந்த நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 4ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் ஏழு ஏக்கா் நிலத்தை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் சாா்பு நீதி மன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிவடையும் பட்சத்தில் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் தவிா்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.