சென்னை: வேளச்சேரி – கைவேலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி) திறந்து வைக்கிறார்.
வேளச்சேரி பகுதியில் ஏற்பட்டுள்ள விஜயநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் விஜயநகரில், வேளச்சேரி – தரமணி, வேளச்சேரி-கைவேலி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி விரைவு சாலை வரை 36 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மைய பகுதி 50 அடி உயரம் கொண்டது. அதேபோல் வேளச்சேரி விரைவு சாலையில் இருந்து தாம்பரம் சாலை வரை 17 தூண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் மைய பகுதி 25 அடி உயரம் கொண்டது. 2 ஆண்டில் அனைத்து பணிகளும் முடிய வேண்டியது. நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்கு விவகாரங்களால் பாலம்கட்டும் பணி தாமதமானது. பின்னர் வழக்குகள் நேர் செய்யப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு முதல் மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், 2021 தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஸ்டாலின் தலைமயிலான திமுக அரசு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து, 2021ம் அண்டு நவம்பர் மாதம் 1ந்தேதி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே தரமணி – வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தற்போது வேளச்சேரி தாம்பரம் விரைவு சாலை வழியாக கைவேலி வரை இரண்டாம் பாதியை வரும் 17ஆம் தேதி (நாளை) முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இந்த இரண்டடுக்கு மேம்பாலம் முழுமையாக செயல்பட்டு வருவதால், வேளச்சேரி பகுதியில் போக்குவரத்த நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.45 லட்சத்தில் 82 கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.