சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 17ந்தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். அதைத்தொடர்ந்து, உதகையில் துணைவேந்தர் கள் பங்கேற்கும் மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் 25ந்தேதி, 26ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆளுநர் மாளிகை சார்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி வேம்புஉற்பட பலர் சிறப்புரை ஆற்றினார். இதில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாரிதக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது விமர்சனங்களை எழுப்பியது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்டு 17ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டதால், அந்த கூட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
இந்த நிலையில், வருகிற 30ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நான் முதல்வன் திட்டத்துக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும், புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.