சென்னை:  ’தமிழ்நாடு வாழ்க எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம்’  முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில்,” பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, அதில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டிய பிறகு கொண்டாடும் விழாவில், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அன்றோ! ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது.

ஆண்டுத் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்குவது மரபு. அந்த மரபுக்கு மதிப்பளித்து, அரசின் கொள்கை அறிக்கையாக முன்வைக்கப்படும் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு, அதனை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, உரிய அனுமதி பெற்று, ஆளுநரின் கையொப்பமும் இடப்பட்ட அந்த உரை, அச்சுக்கு அனுப்பப்பட்டு, சட்டமன்றம் கூடிய ஜனவரி 9-ஆம் நாள் காலையில் உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் நடந்தவை என்ன என்பது குறித்தும், தாம் ஒப்புதல் அளித்த உரைக்கு மாறாக ஆளுநர் சேர்த்தல் – நீக்கலுடன் ஆற்றிய உரையைப் பற்றியும் இந்திய அளவிலான பிரபல ஏடுகளின் பார்வையை மட்டும் முன்வைக்கிறேன்.

THE HINDU நாளிதழ் Bad and Ugly என்ற தலைப்பிட்டு, 12-1-2023 அன்று வெளியிட்ட தலையங்கத்தின் இறுதியில், “ஆளுநர் மாளிகையில் பதவி வகிப்பவர்கள் தங்களின் மேலாதிக்க உணர்வைக் கைவிட்டு, தேங்கிக் கிடக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற தங்களது அரசமைப்புச் சட்டப் பணிகளைச் செய்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

வட இந்தியாவில் வெளிவரும் ஆங்கில நாளேட்டில் “The Misreading” என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், “சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் வாசிக்கப்படுவதற்காக அரசால் தயாரிக்கப்படும் ஆளுநர் உரை என்பது அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தும் அறிக்கை ஆகும். அதனை ஆளுநர் முழுதாகப் படிக்க வேண்டும் என்பதுதான் மரபு. ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்த பகுதிகளில் சர்ச்சைக்குரியது என்றோ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றோ தவறானது என்றோ கூறத்தக்க வகையில் எதுவும் இல்லை. பின் ஏன் ஆளுநர் அவற்றை மறுப்புக்குரியதாகப் பார்த்தார் என்று விளங்கவில்லை. அவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் அவர் வகிக்கும் பொறுப்புக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொரு செய்தியில், ‘மாநில அரசுகளின் சட்ட மசோதாக்களை ஆளுநர் வேண்டுமென்றே கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதம்’ எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “ஒரு மாநில ஆளுநர் என்பவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரு நிலை உறவுகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டிய பொறுப்பைக் கொண்டவர். அவ்வகையில் முன்னாள் காவல்துறை அதிகாரியான ஆர்.என்.ரவி இன்னும் நிர்வாக ஞானத்துடன் செயல்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.

Govt-Governor tussle என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், “தமிழ்நாடு என்பதைவிடத் தமிழகம் என்பதுதான் சரியாக இருக்கும் எனத் தெரிவித்ததிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார். தேவையற்ற இந்த ஆலோசனை என்பது, ஆளுநரின் அரசியல்-சித்தாந்த நடுநிலைமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மாநிலத்தின் ‘பிற்போக்கு அரசியல்’ என்ற வகையில் அவர் பேசுவதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியிலான ஆளுநரின் அலுவலுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. அரசு நிர்வாகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் அரசியல் சட்ட வரையறைக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

“ஆளுநர் ரவி சில நிமிடங்களில் மாநிலத்தையும், அதன் தலைவர்களையும், சட்டமன்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும், அரசியல் சட்டத்தையும், மரபுகளையும் அப்பட்டமாக அவமதித்து – அவமரியாதை செய்திருக்கிறார். ஆகவே தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்” என “The case of the intractable governor” என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு பத்திரிக்கையில் விரிவாகக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

மக்களவையின் முன்னாள் செயலர் (Secretary General) பி.டி.டி.ஆச்சாரி “மாநில அரசு தயாரிக்கும் உரையில் ஆளுநர், ஒரு புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது” என்பதை விளக்கியுள்ளார். ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தேவசகாயம், பாலச்சந்திரன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் அவை மரபுக்கும் அரசியல் சட்ட மாண்புக்கும் மாறாக ஆளுநர் நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் இரகுபதி, கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து, ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.

அரசின் கொள்கைகளை முன் வைக்கும் உரையில் இடம்பெற்ற சிலவற்றை ஆளுநர் தவிர்த்து, தாமாகச் சிலவற்றை சேர்த்தபோதும் அவை எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு என்ற பெயரும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட மறைந்த மாபெரும் தலைவர்களின் திருப்பெயர்களுமே தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சுயமரியாதையைப் பின்புலமாகக் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சட்டப்பேரவையில் தி.மு.கழகம் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது.

அரசின் கொள்கைகளை முன் வைக்கும் உரையில் இடம்பெற்ற சிலவற்றை ஆளுநர் தவிர்த்து, தாமாகச் சிலவற்றை சேர்த்தபோதும் அவை எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு என்ற பெயரும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட மறைந்த மாபெரும் தலைவர்களின் திருப்பெயர்களுமே தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சுயமரியாதையைப் பின்புலமாகக் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சட்டப்பேரவையில் தி.மு.கழகம் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது.

சட்டப் பேரவையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது. அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் நிறைய பொருட்கள் இருந்தன. தரமான முறையில் கவனத்துடன் வழங்கப்பட்டன. ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குறைகள் வெளிப்பட்டன. எதிர்க்கட்சிகள் அவற்றை பூதக்கண்ணாடி வைத்துப் பெருக்கி, அவல அரசியல் செய்ய நினைத்தபோதும், அதனையும்கூட அலட்சியப்படுத்தாமல், குறைகள் குறித்து விசாரித்தறிய குழு அமைக்கப்பட்டது. இந்த முறை அந்தக் குறையும் சிறிதும் கூட இருக்கக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டு ரொக்கத் தொகையுடன் தரமான பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் உழவர்கள் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முழுக் கரும்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பொருட்களும் அனைவருக்கும் தரமாகவும் விரைவாகவும் கிடைத்திட வேண்டும் என்பதற்காக உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு, தரம் உறுதி செய்யப்பட்டு பொருட்கள் தேர்வு செய்யப்பட்டன. கரும்பு விவசாயிகளுக்கு எவ்விதப் பாதகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், வயலுக்கே அதிகாரிகள் நேரில் சென்று உரிய விலைக்கு, ஆறடிக்குக் குறையாத அளவில் தடிமனான பன்னீர்க் கரும்புகளைத் தேர்வு செய்து, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றையும் கணக்கிட்டு, உழவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தினர்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 5-ம் நாளன்றே மாநிலம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன. ஜனவரி 9-ம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் முறைப்படித் தொடங்கி வைத்தேன். அப்போதே மக்களின் மனத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நேரில் கண்டு களிப்புற்றேன். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், எல்லாருடைய முகத்திலும் புன்னகையைக் காண முடிந்தது.

பொங்கல் திருநாளை நமது பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் “இதுதான் தமிழர் திருநாள்” என மக்களின் மனதில் பதிந்திடும் வகையில் சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர்.

தி.மு.க மீதான காழ்ப்புணர்வால் முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. அரசு, பொங்கல் நன்னாளின் உள்ளீடாக இருக்கும் பண்பாட்டுப் பெருமைகளையெல்லாம் சிதைத்துவிட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொங்கல் விழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுக் கலைவிழாவாக ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுகிறது. பாரம்பரியக் கலைகளைப் பேணிக் காக்கும் தமிழ்நாட்டுக் கலைஞர்களைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இதனை நடத்துகிறார் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுவின் துணைத் தலைவருமான அன்புத் தங்கை கவிஞர் கனிமொழி கருணாநிதி. சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கியச் சங்கமம் என்ற நிகழ்வும் நடைபெறுகிறது. பன்னாட்டுப் புத்தக விழாவுடன் கூடிய சென்னைப் புத்தகக் காட்சியும் நடைபெற்று வருகிறது. முத்தமிழையும் முக்கனிச் சுவை போல வழங்கி வருகின்றன தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள பொங்கல் விழா நிகழ்ச்சிகள்.

தலைநகரில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வீர விளையாட்டுகள், கலை விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளன. அயலகத் தமிழர் நாளில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ஆகியவை உலகெங்கும் வாழும் தமிழர்களை உணர்வால் இணைக்கும் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டு வெளிப்பாடுகள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான – தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும் வேலைவாய்ப்பையும் பெருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வீட்டிலும் நாட்டிலும் வளர்ச்சியும், அதனால் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது.

சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம். ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.