சேலம்: இரண்டுநாள் பயணமாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதையடுத்து,  அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரில் பூக்களை தூவினார்.

மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12 ஆம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள   நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்தக்கு  நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாக இருந்தால் மட்டுமே அன்றைய நாளில் நீர் திறக்கப்படும். அந்த வகையில் உரிய தேதியில் 19 முறையும், முன் கூட்டியே 11 முறையும், காலதாமதமாக 61 முறையும் திறக்கப்பட்டுள்ளது.

2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வந்த நிலையில், 2020, 2021 ஆம் ஆண்டுகளில் உரிய தேதியில் திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மே 24 இல் முன்கூட்டியே திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உரிய தேதியில் திறக்கப்பட்டாலும், கர்நாடகா போதிய அளவு நீரை திறக்காததால், முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு தாமதமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.97 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக 110 அடியாக உயர்ந்தபின், ஜூலை 28 ஆம் தேதி காலதாமதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு, அணையில் தண்ணீர் 100 அடிக்குமேல் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்தநிலையில், தற்போது  மேட்டூர் அணையில் 114 அடி நீர்மட்டம் இருப்பதால், திட்டமிட்டபடி  ஜூன் 12 ஆம் தேதி விவசாயத்துக்க தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் முகாமிட்டுள்ள   தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து இன்று நீரைத் திறந்து வைத்தார்.

முன்னதாக,  2 நாட்கள் சுற்றுப்பயணமாக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் மாவட்டத்துக்கு வந்தார்.  நேற்று காலை ஈரோடு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகை தந்ததார்.   சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து,   நேற்று இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்  தங்கினார்.