சென்னை: பொதுமக்கள் அரசுபேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில், பல மொழிகள் பேசும் மக்களின் வசதிக்காக பல மொழிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை ஒன்’ செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
இந்த சென்னை ஒன் செயலி மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

‘சென்னை ஒன் செயலி’ பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
சென்னையில் தினமும் சுமார் 35 லட்சம் பயணிகள் MTC பேருந்துகளையும், 9லட்சம் பேர் புறநகர் ரயில்களையும், 3லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவைகளையும் பயன்படுத்துவதாகக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள ஒருங்கிணைந்த டிக்கெட் முறை பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களுக்கு மட்டுமே மொபைல் செயலி மூலம் பயணிக்க அனுமதிக்கும் நிலையில், சென்னை தனது ‘சேவையாக இயக்கம் (MaaS)’ மூலம் முழுமையான ஒருங்கிணைந்த அமைப்பை, நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.

‘Chennai One’ – சென்னை ஒன்’ செயலி பயணிகள் இனி ஒரே செயலியின் மூலம் மூன்று முக்கிய பொதுப் போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யலாம். வெவ்வேறு மொபைல் செயலிகளைப் பதிவிறக்கவோ அல்லது பல ஸ்மார்ட் கார்டுகளை எடுத்துச் செல்லவோ தேவையில்லை. ‘சென்னை பெருநகரப் பகுதியில் பயணத் திட்டமிடுதலுடன் கூடிய ஒருங்கிணைந்த டிக்கெட்’ என்ற ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் ‘சென்னை ஒன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது