திருப்பத்தூர்: இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். . திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;-
1) ஆலங்காயம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும்.
2) குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
3) நல்லகுண்டாவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
4) திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்.
5) ஆம்பூரில் ரூ.1 கோடியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்
இவ்வாறு அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.