சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த திட்டம் , அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் யார், தகுதிகள், விண்ணப்பம் வழங்குவது குறித்து முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து அடுத்துக்கட்ட நடவடிக்கையாக, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது.
விடுபட்ட பயனர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்கும் வகையில், இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை மொத்தமாக 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து 3ஆம் கட்டமாகவும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அவையும் பெறப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு செப்.15-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.1000 பணம் வரவுவைக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை ஏற்கனவே அறிவித்த அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்துவதற்கான இடம் தேர்வுசெய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம், முதல்வரின் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. காஞ்சிபுரத்தில், பயனாளிகள் சிலருக்கு நேரடியாக உரிமைத்தொகை வழங்கும் முதல்வர், அப்போதே வங்கிக்கணக்கில் மீதமுள்ளவர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.