நெல்லை:  திருநெல்வேலியில், ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் முதன் முதலாக அதிக கல்வி நிறுவனங்கள் உருவானது நெல்லையில்தான் என புகழாரம் சூட்டினார்.முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று நெல்லையில்,  வேளாண்மைப் பொறியியல் துறை விவசாயிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மானியத்தில் வழங்கினார். முன்னதாக, ஸ்டாலின்,  திருநெல்வேலி அரசு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மற்றொரு இடத்தில்,  மாறுவேடம் அணிந்திருந்த பள்ளி சிறுவர்கள் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு,  அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மற்றொரு இடத்தில் வரவேற்பு அளித்த மாற்றுத்திறனாளிகளிடம்,உரையாடினார். அப்போது அவர்கள், திமுக அரசு செய்துவரும் நலத்திட்டங்களை பாராட்டினர்.

தொடர்ந்து, விழா நடைபெறும் அரங்குக்கு சென்றார். அங்கு விழா நடைபெறும் அரங்கில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் அமைப்பட்டுள்ள தமிழறிஞர்கள் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்களின் சிலைகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.155.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், 3 கட்டங்களாக அமைக்கப்படும்” என்று கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மணிமுத்தாறு அணை அருகில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.

வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களக்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ராதாபுரத்தில் விளையாட்டரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், 3 கட்டங்களாக அமைக்கப்படும். இதுபோன்ற சிறப்பான பணிகளை மாதந்தோறும், வாரந்தோறும் ஏன், தினந்தோறும் தொடங்கி செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் முழு உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த பராமரிப்புகளுக்காக டிஜிட்டல் பதிவேடு பராமரிக்கப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது முழு உடல் பரிசோதனை விவரங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இவ்வாறு கூறினார்.