ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி முழுஉருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்து வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து, 2026 தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

இந்த கள ஆய்வுகளின்போது, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

ஏற்கனவே கோவை, விருதுநகர் மாவட்டங்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரியலூர்,ந ளை பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், மற்றும் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பயணிகள் விடுதியில் தங்கினார். அதையடுத்து இன்று காலை, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.