சென்னை: சுற்றுச்சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், விடுதி கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொட்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ. 32.99 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், ரூ. 15.34 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ. 32.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 3.57 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஏலகிரி – ஜலகம்பாறை சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலா தடம், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 75 மரகதப் பூஞ்சோலைகள், சென்னை, காசிமேட்டில் ரூ. 22.42 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (14.08.2024) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 32 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 196.65 கோடி ரூபாய் செலவில் 415 பள்ளிக் கட்டடங்கள், 127.92 கோடி ரூபாய் செலவில் 71 விடுதிக் கட்டடங்கள், 17.43 கோடி ரூபாய் செலவில் 28 சமுதாய நலக்கூடங்கள் மற்றும் 61.76 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் திறந்து வைத்தல்
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டை ஆகிய இடங்களில் 6 கோடியே 71 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான 2 விடுதிக் கட்டடங்கள்; தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம், ஆறுமுகனேரி, குலசேகரப்பட்டினம், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், இராசிபுரம் ஆகிய இடங்களில் 11 கோடியே 32 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்கள்;கள்ளக்குறிச்சி மாவட்டம் – மூலக்காடு, மேல்வாழப்பாடி, கிளாக்காடு, மணியார்பாளையம் மற்றும் அரசம்பட்டு ஆகிய இடங்களில் 8 கோடியே 95 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்கள்; வேலூர், விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பந்தட்டை, சென்னை மாவட்டம் – வேப்பேரி ஆகிய இடங்களில் 6 கோடியே 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 4 விடுதிக் கட்டடங்கள்; என மொத்தம் 32 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 16 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்கள் திறந்து வைத்தல்
திருவள்ளூர் மாவட்டம் – பெரும்பேடுகுப்பம், செங்கல்பட்டு மாவட்டம் – புலிக்குன்றம், மதுரை மாவட்டம் – செம்பியனேந்தல், தேனி மாவட்டம் – டி.பொம்மிநாயக்கன்பட்டி, பி. துரைராஜப்புரம், அம்மாச்சியாபுரம், சேலம் மாவட்டம் – மாட்டுக்காரனூர், சிக்கனம்பட்டி, சிவகங்கை மாவட்டம் – அதிகாரம், கடலூர் மாவட்டம் – ஊமங்கலம், சேப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் – பிடாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பழையபாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – சிறுவங்கூர் ஆகிய இடங்களில் 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்களை திறந்து வைத்தல்
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 32 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர். ஆர். காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ. மதிவாணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த. ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், உள்பட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வனச்சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்
இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டின் இயற்கை சூழலை பாதுகாத்து, மேம்படுத்திடும் நோக்கில் பல்வேறு வனச்சூழல் சுற்றுலா முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கிராம மக்கள் மற்றும் மலைவாழ் மக்களை உள்ளடக்கிய சூழல் சுற்றுலாக்களை மேம்படுத்தப்படுவதால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறுவதோடு, சுற்றுலா பயணிகளுக்கும் வனங்கள் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சூழல் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை கிராம மக்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் கிராம மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் பங்கேற்க ஊக்கமளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, இவ்வாண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூழல் சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா அமைக்கவும், தமிழ்நாட்டின் வனப்பகுதியிலுள்ள மலையேற்ற வழிதடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன் அத்தடங்களில் அடிப்படை வசதிகளை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு 30 கோடி ரூபாய் செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் 3.8.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் குரும்பப்பட்டி, ஏற்காடு, அய்யூர், தேன்கனிக்கோட்டை, ஏலகிரி, பீமன் நீர்வீழ்ச்சிப்பகுதி, அங்குத்தி சுனை நீர்வீழ்ச்சிப் பகுதி, கூடலூரில் உள்ள மரபணுத் தோட்டம் சூழல் சுற்றுலா பகுதி, குடியம் குகை சூழல் சுற்றுலா பகுதி என பல்வேறு பகுதிகளில் சூழல் சுற்றுலா பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு சூழல் சுற்றுலாவில் புதிய ஏற்றம் கண்டுவருகிறது.
மேம்படுத்தப்பட்ட ஏலகிரி – ஜலகம்பாறை சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலா தடத்தை திறந்து வைத்தல்
திருப்பத்தூர் வனச்சரகத்தில் நாகலூத்து காப்புக்காட்டில் அமைந்துள்ள ஏலகிரி மலைகளில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலா தலமாகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பசுமைக்கு மத்தியில் ஓர் இனிய இயற்கை தலமாக விளங்குகிறது. இந்நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் நகரத்திலிருந்து எளிதில் அணுகக்கூடியதாகவும், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தி பெற்றும் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கு வருகை தருகின்றனர்.
முதலமைச்சர் 29.06.2022 அன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது, வனத்துறை மூலம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சூழல்சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கிணங்க, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகம்பாறை அருவியில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 3.57 கோடி ரூபாய் செலவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலாவினை ஊக்குவிக்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்புதிய மேம்படுத்தப்பட்ட சூழல் சுற்றுலா வசதிகளுடன் கூடிய ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் ஏலகிரி சூழல் சுற்றுலா தடத்தினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இச்சுற்றுலா தடத்தில், மேம்படுத்தப்பட்ட நீர்வீழ்ச்சி பகுதி மற்றும் அருவிக்கு செல்லும் நடைபாதை, நிழற்குடைகள், உயிர் அளவு வன உயிரின சிலைகள், திறந்தவெளி விளக்க மையம், சூழல் அங்காடி, சிற்றுண்டியகம், நுழைவாயில் வளைவுகள், புதிய சிறுவர் பூங்கா, செயற்கை நீரூற்று, மேம்படுத்தப்பட்ட கழிவறை வசதிகள், உடை மாற்றும் அறைகள் என பல்வேறு புதிய வசதிகள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஏலகிரி மலைகளில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு புதிய சூழல் வகுப்பறைகள், நிலாவூரில் நடைபாதைகளுடன் கூடிய புதிய காட்சிமுனை, விழிப்புணர்வு பலகைகளுடன் கூடிய புதிய தொலைநோக்கி காட்சிமுனை ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 75 மரகதப் பூஞ்சோலைகளை திறந்து வைத்தல்
2022-23ஆம் ஆண்டிற்கான வனத்துறை மானியக் கோரிக்கையில், 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும் என்றும், இச்சோலைகள் ஒவ்வொன்றும் ஒரு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என்றும், நீர்நிலையை மேம்படுத்தி சூழலியல் சேவைகளை வழங்குவதோடு பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, இத்திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், உள்ளூர் மக்களின் உள்ளார்ந்த பங்கேற்புடன் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை மொத்தம் 75 எண்ணிக்கையிலான மரகதப்பூஞ்சோலைகள் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இன்றைய தினம் 75 மரகதப் பூஞ்சோலைகளை திறந்து வைத்தார்.
இத்திட்டத்திற்காக 19.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மரகதப்பூஞ்சோலையும் வருவாய்த் துறை நிலங்களில் 1 ஹெக்டேர் பரப்பில் வனத்துறையால் உருவாக்கப்பட்டு இரண்டு வருட பராமரிப்பு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அந்தந்த கிராம ஊராட்சிகளிடம் தொடர் பராமரிப்பு செய்யும் பொருட்டு ஒப்படைப்பு செய்யப்படும். செடி நடவு பணிகளின் கீழ் 75 மரகதப்பூஞ்சோலைகளிலும் மொத்தம் 46,875 எண்ணிக்கையிலான தடி மரங்கள் மற்றும் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பூங்காவில் ஆங்காங்கே உட்காரும் நீள-சாய்வு நாற்காலிகள், பார்வையாளர் அமர பகுதி நிரந்தரக்கூடாரம், நடைபாதைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மரகதப்பூஞ்சோலைகள்
தமிழ்நாடு அரசின் தனித்துவமான முன்னெடுப்பாக பிரதிபலிப்பதுடன், கிராம மக்களுக்கு ஒரு பொழுது போக்கு, புவி வெப்ப சமநிலைப்படுத்தும் இடமாகவும், விலங்கினங்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான உணவுகளான பழம், தீவனம், தண்ணீர், தடிமரம் தருவதுடன், எதிர்காலத்தில் காலநிலை மாற்றப் பாதுகாப்பு சூழலை கிராமங்களுக்கு கிடைக்கும் வகையிலும் இந்த மரகதப்பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் மர இனங்களான நாவல் (Syzygium cumini), நெல்லி, (Phyllanthus emblica), நீர்மருது (Terminalia arjuna), தென்னை (Cocos nucifera), பாதாம் (Terminalia catappa), புளி (Tamarindus indica) வில்வம் (Aegle marmelos), பூவரசு (Thespesia populnea), கொய்யா (Psidium guajava), செஞ்சந்தனம் (Pterocarpus santalinus), எட்டி (Strychnos nux-vomica), பலா (Artocarpus heterophyllus), மகிழம் (Mimusops elengi), புன்னை (Calophyllum inophyllum), அத்தி (Ficus racemosa), ஆல் (Ficus benghalensis), கொடுக்காப்புளி (Pithecellobium dulce), மா (Mangifera indica), வேம்பு (Azadirachta indica) முதலியன பெருமளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் மீதமுள்ள 8 கிராமங்களுக்கும் மரகதப்பூஞ்சோலைகள் உருவாக்கும் வகையில் 1.58 கோடி ரூபாய் நிதி மறுஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எஞ்சிய 17 கிராமங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை, காசிமேட்டில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு மையத்தை திறந்து வைத்தல்
சென்னை, காசிமேட்டில் 22 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாடற்ற மீன்பிடி வலைகள் சேகரிப்புகளின் முதல் மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த மையம் பயன்பாடற்ற மீன்பிடி வலைகள் சேகரிப்பை நிர்வகித்து, சேகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகள் மறுசுழற்சி செய்பவர்களுக்கே அனுப்புவதன் மூலம் சுழல் பொருளாதாரம் உறுதி செய்யப்படுகிறது. இதன்மூலம், கடல் மாசுபாட்டிற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடு மீன்பிடி வலைகளை மீட்டெடுக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது. இந்த முயற்சியால் பயன்பாடற்ற மீன்வலைகளை மீட்டெடுக்கவும் மறுசுழற்சி செய்யவும், கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் மற்றும் சுற்றுப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இயலும்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடல்களைப் பாதுகாப்பதற்கும், கடல் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கடலோர சமூகங்களை மேம்படுத்திடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதோடு, கடற்கரையோரங்களில் அப்புறப்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை மதிப்பிடுவதற்கு விரிவான அடிப்படைக் கணக்கெடுப்பினை நடத்தி, மாநிலத்தில் உள்ள மீன்பிடி வலை உற்பத்தியாளர்களுக்கான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer’s Responsibiity) திட்டத்தை வடிவமைத்து மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், சேகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகள் மறுசுழற்சி செய்பவர்களிடம் தடையின்றி சென்றடைவதை உறுதிசெய்து, கழிவுகள் மதிப்புமிக்க வளங்களாக மாற்றியமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தல்
2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் (IEMS) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தின் (TNeGA) மூலம் 1.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இம்மையத்தினை வாரியத்தின் மத்திய கண்காணிப்பு மையமாக நிறுவியுள்ளது. இதன்மூலம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்வு, கழிவுநீர் மற்றும் காற்று/நீரின் தரம், அபாயகரமான/மருத்துவக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களின் இயக்கத்தை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க முடியும்.
இம்மையத்தில் பணிபுரியும் வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற காற்றின் தரம், தொழிற்சாலைகள் காற்று உமிழ்வு மற்றும் கழிவுநீர் கண்காணிப்பு, பொது மற்றும் தனி சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் போன்றவற்றின் தர அளவுகளை தொடர்ந்து 24×7 மணிநேரமும் கண்காணிக்க முடியும். மேலும், ஏதேனும் அளவுருக்கள் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அத்தொழிற்சாலைகளுக்கும் மற்றும் அப்பகுதி வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள்/மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆகிய அதிகாரிகளுக்கும் தக்க நடவடிக்கைக்காக தகவல்களை உடன் அனுப்ப இயலும். அத்துடன், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்து இணையச் சேவை மூலம் 24×7 நேரமும் தொடந்து கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) முனைவர் சுதான்சு குப்தா. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் தலைமை திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் தலைமை திட்ட இயக்குநர் இ. அன்வர்தீன். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் முனைவர் எம். ஜெயந்தி,, உறுப்பினர் – செயலர் ஆர். கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.