சென்னை மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல் நலக்குறைவால் நேற்று இரவு (மார்ச் 25) இரவு காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானார் நேற்று இரவு முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோஜ் உடல் இன்று மாலை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் மனோஜின் மறைவுக்கு ஏற்கனவே இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று முற்பகல், மறைந்த மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நீலாங்கரையில் இயக்குனர் பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மனோஜின் உடலுக்கு இன்று மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.