சேலம்: நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மற்றும் திமுகஅரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசியுள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்அமைச்சர், திறமையற்ற முதல்அமைச்சர் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார். அவர் கவனத்துக்கு நான் சில தகவல்களை சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்கு ஆங்கில பத்திரிக்கை ஆய்வு நடத்தி சான்று அளித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? என கேள்வி எழுப்பினார்.
கடந்த 3மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் 36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றது என கூறினேன். ஆனால் காவல்துறை அதிகாரிகள் இல்லை இல்லை கடந்த 36 மணிநேரத்தில் 12 கொலைகள் தான் நடைபெற்றது என சொன்னார்கள். இதனை பார்த்தாலே தெரியும் தமிழக சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. 2,138 பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே கஞ்சா விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதை மானிய கோரிக்கையின்போது முதல்வரே சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். இதற்கு பதில் கேட்டேன் ஆனால் பதில் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில், சுமார் 140 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. அப்போ மீதம் உள்ளவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டுள்ளாரா? அதனால் தான் கைது செய்யப்படவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலருக்கு தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால் இது முதல்அமைச்சருக்கு தெரியவில்லையா? தற்போது ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்அமைச்சர், திறமையற்ற முதல்அமைச்சர் உள்துறையை கையில் வைத்துள்ள முதல்அமைச்சர் இன்று போதை பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வினர் ஈடுபடுவது தெள்ளத் தெளிவாகிவிட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது மு.க.ஸ்டாலின், நான் உறங்கி காலையில கண்விழ்கின்ற பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கின்றேன். நம்முடைய கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ? என்று பயத்தில் கண்விழிக்கிறேன் என்றார். இது அவர் கொடுத்த வாக்குமூலம், நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை அந்த கட்சியின் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற அன்றாட செய்தியை வைத்து தான் இதை நாங்கள் சொல்கிறோம். எதிர்க்கட்சியாக எங்கள் கடமையை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறோம். ஆனால் அவர்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதை கண்டு சிலருக்கு வயிறெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மக்கள் வயிறெரிகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்,.
ஒரு முதல் அமைச்சரின் கடமை என்ன? நாட்டு மக்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கலகத்தலைவன் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அவர் வீட்டு மக்களைப் பற்றியேதான் முதல்வர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார், மு.க.ஸ்டாலின் நடைபயணம் சென்றார். அப்போது, அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகத்தலைவன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறார்.
அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் “யாரும் எழுந்திரிக்கல.. படம் நன்றாகத்தான் ஓடுகிறது” என்றார். இதுதான் நாட்டிற்கு முக்கியமா? ஒரு முதலமைச்சரின் கடமை என்ன? நாட்டு மக்களைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக வீட்டு மக்களைப் பற்றி சிந்திப்பவர்தான் மு.க.ஸ்டாலின். எவ்வளவு பிரச்சினை நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களை பற்றி அவர் சிந்திப்பது இல்லை என்றும் விமர்சித்தார்.
தமிழகத்தில் பல அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை. அதை நான் அறிக்கை வாயிலாக வெளியிட்டேன் அதையெல்லாம் அவர் அமைச்சருடன் ஆலோசிக்கா மல் தனது மகன் நடித்த திரைப்படம் எப்படி உள்ளது? அது அதிக வசூலை கொடுக்குமா? என்று அமைச்சரிடம் விவாதிக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி லட்சக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க வழி செய்தோம். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினோம்.
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். புயல், வெள்ள பாதிப்புகளின்போது உரிய நிவாரணம் உடனடியாக வழங்கினோம். விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவர்கள் பயிரிட்ட அந்த பயிர்கள் எல்லாம் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகமான காப்பீட்டை அ.தி.மு.க. அரசுதான் விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தது. குடிமராமத்து திட்டம் மூலம் தண்ணீரை நீர்நிலைகளில் சேமிக்க செய்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டப் பணிகளும் நடக்கவில்லை.
“எதிர்க்கட்சியை பழிவாங்குவதிலேதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை காப்பாற்றுவதில் அவர் கவனம் செலுத்தவில்லை என்று கூறியவர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க எங்கு அழைத்தாலும் நான் வரத் தயார் ; திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து பேச நீங்கள் தயரா..?
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.