சென்னை:  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 3,297 திருக்கோயில்களில் குடமுழுக்கு, தொன்மையான திருக்கோயில் களை பழமை மாறாமல் புனரமைத்தல், புதிய திருத்தேர்கள் உருவாக்கம் மற்றும் திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மன்னர்களாலும், நமது முன்னோர்களாலும் கட்டப்பட்டு திராவிட கட்டடக் கலையின் பொக்கிஷங்களாக திகழும் தேவாரம் பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில்கள், இதர திருக்கோயில்களின் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களாக 714 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டு, அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வீதம் 300 கோடி ரூபாயும், நடப்பாண்டிற்கு 125 கோடி ரூபாயும், என மொத்தம் 425 கோடி ரூபாயினை அரசு நிதியாக வழங்கியுள்ளார்.

அரசு நிதி, உபயதாரர் நிதி, திருக்கோயில் நிதி என மொத்தம் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு, இதுவரை 60 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுபெற்றுள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை, அருள்மிகு மதுசூதனப்பெருமாள் திருக்கோயில்,

தூத்துக்குடி மாவட்டம், அப்பன்கோயில், அருள்மிகு திருவேங்கடத்தப்பன் திருக்கோயில்,

திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர், அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில், மானுார், அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான இராஜகோபாலசுவாமி திருக்கோயில், வடக்கு அரியநாயகிபுரம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், மேலச்செவல், அருள்மிகு ஆதித்தவர்னேஸ்வரர் திருக்கோயில், சேரன்மகாதேவி, அருள்மிகு அம்மநாதசுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி, அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வள்ளியூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோவில்குளம், அருள்மிகு கிருஷ்ணசுவாமி வகையறா திருக்கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கடம்போடுவாழ்வு, அருள்மிகு கைலாசநாதசுவாமி மற்றும் வெங்கடாசலபதி திருக்கோயில்;

திருச்சி மாவட்டம், அல்லூர், அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில், அளுந்தூர், அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், ஆலத்துடையான்பட்டி, அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பரிதியப்பர் கோவில், அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருவாய்பாடி, அருள்மிகு பாலுகந்தநாதசுவாமி திருக்கோயில், உடையாளூர், அருள்மிகு கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநரையூர், அருள்மிகு சித்தநாதசுவாமி திருக்கோயில், முழையூர், அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில்,

திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், அருள்மிகு கொழுந்தீஸ்வரசுவாமி திருக்கோயில், கோயில்திருமாளம், அருள்மிகு மகாகாளநாத சுவாமி திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்;

நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரசுவாமி திருக்கோயில், கோடியக்காடு, அருள்மிகு அமிர்தகடேஸ்வரசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், சாயாவனம், அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், பல்லாவனம், அருள்மிகு பல்லாவனேஸ்வரர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், அருள்மிகு வலம்புரநாதசுவாமி திருக்கோயில், கீழையூர், அருள்மிகு கடைமுடீஸ்வரசுவாமி திருக்கோயில், பெருந்தோட்டம், அருள்மிகு ஐராதீஸ்வதீஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, அருள்மிகு சங்கரணேஸ்வரர் திருக்கோயில், மூவலூர், அருள்மிகு மார்கசயேஸ்வரர் சுவாமி திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்;

கடலூர் மாவட்டம், திருமூலஸ்தாணம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜேந்திரசோழகன், அருள்மிகு தோளீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், அருள்மிகு பாசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம், அருள்மிகு திருச்சோபுரநாதர் திருக்கோயில், திருவதிகை, அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருமாணிக்குழி, அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாமூர், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குணம், அருள்மிகு ஆளுடையநாயனார் திருக்கோயில், கப்பூர், அருள்மிகு செய்தருளீஸ்வரர் திருக்கோயில், டி.முடையனூர், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், கூகையூர், அருள்மிகு காரீயாம்புரீஸ்வரர் திருக்கோயில், கச்சிராப்பாளையம், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூர், அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எலவனாசூர்கோட்டை, அருள்மிகு அர்த்த நாரீஸ்வரர் திருக்கோயில், வரஞ்சரம், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அருள்மிகு ரிஷபேஷ்வரர் திருக்கோயில், காஞ்சி, அருள்மிகு கரைகண்டீஸ்வரர் திருக்கோயில், பிரம்மதேசம் புதூர், அருள்மிகு ருத்ரகோட்டீஸ்வரர் திருக்கோயில், தாமரைப்பாக்கம், அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்;

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், அருள்மிகு பச்சைவண்ணர் மற்றும் பவள வண்ணர் திருக்கோயில், காஞ்சிபுரம், அருள்மிகு அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்,

திருவள்ளூர் மாவட்டம், செஞ்சி பானம்பாக்கம், அருள்மிகு ஜெனமேஜெயீஸ்வரர் திருக்கோயில்,

செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம், அருள்மிகு மண்ணீஸ்வரர் திருக்கோயில், வேலூர் மாவட்டம், அன்பூண்டி, அருள்மிகு திருத்தாளீஸ்வரர் திருக்கோயில், திருவலம், அருள்மிகு வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்,

இராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர், அருள்மிகு திருக்குகேஸ்வரர் திருக்கோயில், பெருங்காஞ்சி, அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், காவேரிப்பாக்கம், அருள்மிகு அபயவரதராஜப் பெருமாள் திருக்கோயில்;

ஆகிய 63 திருக்கோயில்களை தமிழ்நாடு முதலமைச்சர் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் நமது கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாக திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களின் தொன்மை மற்றும் கட்டடக் கலை போன்றவற்றை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள பேருதவியாக அமையும்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக காஞ்சிபுரத்திலிருந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், க. சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.