சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,. சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார். இதன் காரணமாக சேலத்தின் பல்வேறு சாலைகள் மீண்டும் புதுசாக போடப்பட்டு பளபளக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு செய்லபடுகின்றன என்பது குறித்து களத்தில் முதல்வரால் நேரடியாக ஆய்வு செய்யப்படுகின்றன, மேலும் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து பின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார்.
இந்த திட்டத்தின்படி, முதல்கட்டமாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஸ்டாலின் அங்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், பல இடங்களுக்கு நேரடியாக சென்றும் ஆய்வு நடத்தினார். இதையடுத்து, சில மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமா இன்று சேலம் செல்கிறார். இன்றும், நாளையும் சேலம் மாவட்டத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நேரடியாக கள ஆய்வு பணியில் ஈடுபடவுள்ளார்.
சேலம் வருகை புரியும் முதல்வர் ஸ்டாலின், எவ்வித முன்னறிவிப்புமின்றி நேரடியாக அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று கள ஆய்வு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், எந்தப் பகுதிக்கு எப்பொழுது சென்று, அரசு அலுவலகங்களுக்கு செல்வார் என்பது தெரியாததால், மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் அனைத்து சாலைகளிலும் ‘பேட்ஜ் – வொர்க்’ புதிய சாலை, புதிய குப்பை தொட்டிகளும், சாலை, பாலம், சாக்கடைகளை சுத்தம் செய்வதில் அதீத அக்கறை காட்டி வருகிறது.
அதேபோல, ரேஷன் கடை, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கட்டிடங்களுக்கு வண்ணப் பூச்சு பணியும் நடந்து வருகிறது. அதேபோல, முதல்வரின் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அதிகாரிகள் ‘அலர்ட்’டாக உள்ளனர்.
கடந்த காலங்களில் முதல்வர்கள் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், அவர்கள் செல்லும் பகுதிகளை மட்டுமே அதிகாரிகள் புதுப்பொலிவுடன் வைத்துக் கொள்வர். தற்போது, முதல்வர் ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்யவுள்ளதால், மாவட்டம் முழுவதையும் சீர் படுத்திடவும், போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை மக்கள் ஆச்சர்யத்துடன் காண்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வருகையை முன்னிட்ட, அனைத்து துறை அரசு அலுவலக அதிகாரிகளும், முதல்வரின் கள ஆய்வு செய்வதால், அரசு அலுவலகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், ஆய்வுக்கு தேவையான ஆவணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.