சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மீண்டும் பல மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில், முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிகார மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இப்போதே தெரிவிக்க வேண்டும் என கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாளை (7ந்தேதி) அறிவிக்கப்படும் என கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்ததும் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக செயற்குழுவில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே காரசார வாக்குவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் பரவின. மேலும், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட படி, அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென தனது சொந்த ஊருக்கு சென்ற ஓபிஎஸ், அங்கு 3 நாட்கள் தங்கி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று, ‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்’ என கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டிருந்தார். இதனால், ஓபிஎஸ் மீண்டும், தர்மயுத்தம் நடத்தப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதனால் கட்சி மீண்டும் உடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
அதேவேளையில், சென்னையிலும், எடப்பாடி பழனிச்சாமி, தனது கொங்குமண்டல அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி உள்பட சிலருடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய அமைச்சர்களில் 18 அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்போம் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் எம்எல்ஏக்களின் மனநிலையை அறிய முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதோடு, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு பதிலாக, தேர்தல் பிரசார குழு, தொகுதி பங்கீட்டு குழு, விளம்பர குழு என தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் குழுக்களை அமைக்கவே திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மீண்டும் சில அமைச்சர்களுடன் கோட்டையில், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர் சந்திப்புகளால் கோட்டை வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது.