சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 15ந்தேதி தனது சொந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக மனுத்தாக்கல், பிரசாரம் என பணியாற்றி வருகின்றனர்.

அதிமுக சார்பில், வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 15ந்தேதி எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பழனிச்சாமி இன்றுமாலை முதல் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.

இன்று  சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கிருந்து சேலம் செல்கிறாா். இன்று மாலை, வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் பிரசாரம் செய்கிறாா்.

சனி, ஞாயிற்றுக்கிழமையில் சேலத்தில் தங்கியிருக்கும் அவா், திங்கள்கிழமை (மார்ச்.15) எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், துணைமுதல்வர் ஓபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.