முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அரை மணி நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைத்த நபர், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
அந்த தொலைபேசி அழைப்பு கடலூரில் இருந்து வந்திருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் வெடிகுண்டுமிரட்டல் விடுத்ததாக, தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை சென்னையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்
ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.