சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இந்த சூழலில் எதிராக செயல்படும் ஓ.பி.எஸ். அணியில் உள்ள அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா. வளர்மதி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, சசிகலா, டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக மதுசூதனன் அறிவித்தார்.
அதே போல, சசிகலாவும், ஓ.பி.எஸ். உட்பட அவரது அணிகளை சேர்ந்த பலரை நீக்கியதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.