சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரெடன  டில்லி பயணமாகிறார்.  டெல்லியில் அமைச்சர்கள் உள்பட முக்கிய நபர்களை சந்திப்பதுடன்  நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி,  சசிகலா விடுதலை  போன்ற நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி பறக்கிறார். அங்கு  பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.
இன்று காலை, 11:55 மணிக்கு டெல்லி செல்லும் முதல்வர்,   இரவு, 7:30 மணிக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சசிகலா விடுதலை, அதிமுகவில் எழுந்துள்ள சலசலப்பு,  குருமூர்த்தியின் பேச்சு போன்றவை குறித்தும் விவாதிக்ப்படும் என கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, நாளை காலை, 11:00 மணிக்கு முதல்வர்,  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.  அப்போது, பிரதமருக்கு புத்தாண்டு, பொங்கல்  வாழ்த்து தெரிவிப்பதுடன், மத்திய திட்டங்களுக்கு வர வேண்டிய நிதி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு கோரி, பிரதமரிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, முக்கிய அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. பின்னர், நாளை இரவு, முதல்வர் சென்னை திரும்புகிறார்.
இதற்கிடையில், சென்னையில் கட்டப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு, பிரதமரை அழைக்க உள்ளதாக வெளியான தகவலை அதிமுக மேலிடம் மறுத்திருப்பதுடன்,  ஜெ., நினைவிடத்தை, முதல்வரே திறந்து வைப்பார் என கூறியுள்ளனர்.