சென்னை: நள்ளிரவு கரையை கடந்த நிவர் புயலால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் சேதம் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்கிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.
கடந்த இரு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களை மிரட்டி வந்த நிவர் புயல், புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது.
புயல் கரையை கடந்த நேரத்தில் கடலூர், புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பகுதிகள் மற்றும் தேவையான நிவாரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி பல பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள், குடிசை மற்றும் பலவீனமான வீடுகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 21ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட காரணத்தினால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் மீன்பிடி படகுகளும் கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், புயல் பாதிப்பை எதிர்கொள்ள 164 ஜென்செட்டுகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மணல் மூட்டைகளும், தேசிய பேரிடர் மீட்பு படை உள்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து.
இந்த சூழலில்தான் நேற்று இரவு கரையை கடந்த புயல் சூறாவளியுடன் மழையையும் கொட்டித்தீர்த்தது. இதனால் கடற்கரையோரம் உள்பட பல பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப் பட்டன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த ந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் புறப்பட்டுச் சென்றா. இன்று பிற்பகல் கடலூரில் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.