சென்னை: தமிழகத்தில் மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி குறைந்துவிட்டதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது, 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், மின் கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை என்று கூறியதுடன், மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகிவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக மின்சார வாரியத்தில், கடந்த 9 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, .மின் கட்டண கணக்கீட்டில் எங்கு குறை உள்ளது என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டினால், உடனடியாக சரி செய்யப்படும் என்றும் மின் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்புத்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.