ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்க இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் செய்தி பரவி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்ததார். இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் சசிகலா தன் பிடிக்குள் கொண்டு வந்தார். பொதுச்செயலாளராக தான் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யவைத்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பொறுப்புக்கு அமர்த்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, துணைப்பொதுச்செயலாளராக தனது உறவினர் டிடிவி தினகரனை நியமித்தார். அவரது தலைமையில் அ.தி.மு.க. இயங்கியது.
இதற்கிடையே அ.தி.மு.கழகம், ஓ.பன்னீர் செல்வம் தலையைில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்றும், தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் பிரிந்தது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 எம்பிக்களும், 12 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டன.
இதற்கிடையே அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்ததாக தேர்தலையே ரத்து செய்தது.
மேலும், இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தொடர் நடவடிக்கைகளால் அதிமுக கலகலத்துப்போனது.
இந்த நிலையில் “இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தார்.
தினகரன் அணியைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், “அ.திமுகவில் பிளவு இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் விரும்பியது போல இணைந்தே செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டிலும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் இன்று இரவு அவசர ஆலோசனை கூட்டம் ஏற்பாடானது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இரு அணிகளும் இணை்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடந்தது. இணைந்து செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மீண்டும் ஓ.பி.எஸ். முதல்வர் ஆகப்போகிறார் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அவர்கள் தெரிவிப்பது இதுதான்:
“இணைந்து செயல்படுவது குறித்து கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. மக்களிடையே சசிகலா குடும்பத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவகு குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து டி.டி.வி. தினகரனிடமும் சூசகமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தனது துணைப்பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. மேலும், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து ரகசியக்கூட்டங்கள் பல நடந்தபடியே இருந்தன.
ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பது என்றும் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வராக இருக்கட்டும் என்பதே பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் கட்சி முக்கியயஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும்படி கோரிக்கை வைப்பது என்றும் பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று இரவு வெளிப்டையாகவே அமைச்சர் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் , ஆகியோர் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.
ஆனால் நாளை டிடிவி தினகரனிடம் தெரிவித்துவிட்டு முக்கிய முடிவுகளை அமைச்சர்கள் அறிவிப்பார்கள். அதாவது மீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்பார். இரட்டை இலையை மீட்க இரு அணிகளும் இணைந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கும். மேலும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தங்களது கட்சிப் பதவியைவிட்டு விலகுவார்கள். அல்லது விலக்கப்படுவார்கள்” என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.