டில்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், ஜாமீன் வழங்கக்கோரி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் 4 கிலோ எடை குறைந்து விட்டதாக புலம்பி உள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், சிபிஐ அதிகாரிகளால், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறை வாழ்க்கை ஒரு மாதத்தை கடந்துவிட்ட  நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவரை மேலும் 15 நாள் காவலில் வைக்க இன்று உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத் தில் அவசர மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

‘இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, அவரச வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியை அணுகுமாறு  அறிவுறுத்திவிட்டார்.

இந்த நிலையில் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அதில், “சிதம்பரத்தின்  உடல்நிலை பலவீனமாக உள்ளது. அவரை ஒரு அறையில் அடைத்து  வைத்து, அவருக்குப் பழக்கமில்லாத உணவை வழங்கியுள்ளார். அவர் ஏற்கனவே 4 கிலோவை இழந்துவிட்டார்.”

சிபிஐ காவலில் வைக்க  அதிகபட்சமாக  15 நாட்கள்  மட்டுமே அனுமதி உள்ள நிலையில், சிதம்பரம்  42 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஆகவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவோ, அல்லது விசாரணையின் நோக்கத்திற்காகவோ அவரை தொடர்ந்து சிறையில் அடைப்பது தண்டனை வடிவத்தில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த வாரம் நவராத்தி மற்றும் தசரா விடுமுறை வருவதால், அதற்கு முன்பு ஜாமின் மனு மீது விசாரிக்க சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.