சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட சமூகநலத் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையை அடுத்து நான்கு குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். புகாரின் பேரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செயலாளர் ஹேமசபேசன் தீட்சிதர் உட்பட சிலரைக் காவல்துறை கைது செய்தது.
தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “பழிவாங்கும் நோக்கத்தோடு சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். உண்மையில் அங்கே குழந்தைத் திருமணம் நடக்கவில்லை” என்று கூறினார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். வீட்டிலிருந்த சிறுமிகள் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தக் கொடுமைகளால் அந்தக் சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குழந்தை திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து 3 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது அதில் கோயிலில் சிறுவன் ஒருவன் கையில் தாலியுடன் நின்றிருக்க கல்யாண கோலத்தில் சிறுமி அமர்ந்திருக்கிறார். இவர்களைச் சுற்றி பெரியவர்கள் சிலர் நின்றிருக்கிறார்கள்.
இந்த வீடியோ சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் நடைபெற்ற குழந்தை திருமண வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.