தமிழக அரசியலில் மீண்டும் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. முன்பு சசிகலாவை முதல்வராக்கும் திட்டத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகில் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை வெளியே வர விடாமல், உள்ளேயே “அனைத்து” வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தனர். பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்தன.

தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டிருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு அருகே இ.சி.ஆர். சாலையில் உள்ள சின்ன வீரம்மாபட்டிணத்தில் உள்ள ஒயிண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். .
அதிமுக-வில் பிளவுபட்டு இருந்த ஓ.பி.எஸ்.—-& ஈ.பி.எஸ். இரு அணிகளும் நேற்று இணைந்தன. இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதல்வராக ஓ.பி.எஸ்ஸூக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மாஃபா பாண்டியராஜனை அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த சூழலில், டி.டி.வி.தினகரனுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மெரினாவில் உள்ள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார்கள். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஆளுநரைச் சந்தித்து முறையிட இருப்பதாக கூறினார்கள். அதே போல அந்த அணி எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது தங்களது ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லையென கடிதம் அளித்தனர். பிறகு அவர்கள் சொகுசு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது அப்போது தெரியவில்லை. பிறகு, அவர்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியானது.
புதுச்சேரிக்கு அருகே ஈ.சி.ஆர். சாலையில் உள்ள சின்ன வீரம்மாபட்டிணத்தில் உள்ள ஒயிண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட், புதுச்சேரி அரசியல் புள்ளி ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளேயே அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் பிற வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
இன்று மாலை புதுச்சேரியில் இருந்து 5 ஆடு மற்றும் கோழிகள் மற்றும் இதர உணவு வகைகள் அந்த ரிசார்ட்டுக்கு வாங்கிச் செல்லப்பட்டன. ரிசார்ட் அருகில் உள்ள வீட்டில் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்பெஷலாக உணவு தயாரிக்கப்படுகிறது. எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தங்கள் அணி எம்.எல்.ஏக்கள் தடம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதால் மிகுந்த கண்காணிப்புடன் அவர்களை கண்காணித்து வருகிறது டி.டிவி. தினகரன் அணி. கூவத்தூரைப் போலவே இங்கும், மன்னார்குடியைச் சேர்ந்த நபர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன், “ஒரு நாள் ஓய்வு எடுத்து செல்லவே புதுச்சேரி வந்திருக்கிறோம்” என்று மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்துச் சென்றார்.