ராய்ப்பூர்:

ஜாமீன் பெறுவதற்கான ஆவணங்களுடன் ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையில் இன்று ஒரு ஜாமீன் தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது ஜாமீன் பெற ஸ்யூரிட்டி கொடுத்த நபர், வேறு ஒருவரது சொத்து ஆவணங்களில் தனது புகைப்படத்தை ஒட்டி சமர்ப்பித்திருந்தார். இதை நீதிமன்ற ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

அப்போது இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், ‘‘ஆதார் திட்டத்தின் மக்கள் தாங்களாகவே இணையும் வகையில் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீன் பெற விண்ணப்பம் செய்யும் ஆவணங்களோடு ஆதார் அட்டையும் இணைக்க வேண்டும்.

அதேபோல், ஜாமீனுக்கு ஸ்யூரிட்டி வழங்கும் நபர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும். இதை சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதார் இல்லாமல் ஜாமீன் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.