சத்தீஸ்கர்: நிதி நிறுவனங்களில் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்களுக்கு 7.33 கோடி ரூபாயை சத்தீஸ்கர் அரசு வழங்கி உள்ளது.
முதலமைச்சர் பூபேஷ் பாகல் இல்லத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் வாடிக்கையாளர்கள் அனைவரின் வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் வழியாக 7.33 கோடியை வழங்கினார். யால்கோ ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நிறுவனத்தின் 292.36 ஏக்கர் அசையா சொத்துகள், உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்து இருந்தது.
அதன்பின்னர், சொத்துகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் ஏலம் விடப்பட்டது. இந்த நிலத்தின் மூலமாக இதுவரை 8.15 கோடி ரூபாய் பெறப்பட்டது. பின்னர் இந்த தொகை ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் 197, மகாராஷ்டிராவில் 2,971, மத்திய பிரதேசத்தில் 42 பேர், எஞ்சியுள்ள 13,586 பேர் சத்தீஸ்கரின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 16,796 முதலீட்டாளர்கள் உள்ளனர். அரசின் நடவடிக்கையால் அவர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் பாகெல் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளின் முயற்சியால், ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தில் முப்பது சதவீதம் திருப்பித் தரப்படுகிறது. இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை தருகிறது.
ஆனாலும் முதலீட்டாளர்கள் தங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற்றவுடன் முழுமையாக திருப்தி அடைவோம். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நேர்மையற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதிலிருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார் பாகெல்.