சென்னை: நெஞ்சுவலி காரணமாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டே நாளில் அவரது நெஞ்சுவலி சரியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது 22ந்தேதிகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த  நிலையில், அவருக்கு சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில், முக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்ட  நிலையில், அவரது வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று  மாலை (23ந்தேதி) செந்தில் பாலாஜி குணமடைந்ததாக ஓமந்தூரார் மருத்துவமனைஅவரை டிஸ்சார்ஜ்  செய்துள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  இசிஜி உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரத்த உறைவு இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மூன்றாவது நாளாக நேற்று இருதயம் தொடர்பாக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு தாெடர்ந்து கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பின்னர், உடல் நிலை சரியானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் திடீர் நெஞ்சு வலி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.