கரூர்: செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த திமுக எம்எல்ஏ குளித்தலை மாணிக்கத்துக்கு கரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்எல்ஏ கைது செய்யப்படுவாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை தொகுதியின் திமுக எம்எல்ஏ மாணிக்கம். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற பெண்ணிடம் கடந்த ஆண்டு ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது கடனை திருப்பி செலுத்தும் விதமாக, முன்தேதியிட்ட வங்கி செக்புக் ஒன்றை ராஜம்மாளிடம் தந்துள்ளார். அதன்படி, அந்த செக் புக்கில் உள்ள செக்கை ராஜம்மாள் வங்கியில் போட்டபோது, மாணிக்கம் எம்எல்ஏ வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதுகுறித்து, ராஜம்மாள் மாணிக்கம் எம்எல்ஏவிடம் பேசியபோது, அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜம்மாள் கரூர் கோர்ட்டில் மாணிக்கம் எம்எல்ஏ மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எம்எல்ஏ மாணிக்கத்தை நேரில் ஆஜராக நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி, டிசம்பர் மாதம் 2-ந் தேதி, ஜனவரி மாதம் 24-ந் தேதி என 3 முறை நீதிபதி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்துள்ளார். இந்த நிலையில், 4வது முறையாக பிப்ரவரி 23ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த நீதிபதி சரவணபாபு, மாணிக்கம் எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு காவல்துறை தள்ளப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தம்பிக்க மாணிக்கம் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியினரை பாய்ந்து பிடிக்கும் காவல்துறை, மோசடி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள திமுக எம்எல்ஏவை உடனே கைது செய்யுமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆளுங்கட்சி எம்எல்ஏ செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை, எம்எல்ஏ கைதானால் அது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடும் என்று விமர்சிக்கப்படுகிறது.