சென்னை:  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், கல்லூரி மாணவர்கள் ஒருவர்மீது ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் மக்களிடையே அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியில், குருநானக் என்ற கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு  வழக்கம் போல காலை வேளையில் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பு மாணவர்களுக்கு இடையே  திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை எதிர்தரப்பு மீது வீசியுள்ளார்.  வெடிபொருள் தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது.  இதனால் அந்த பகுதியே கலவரமாக மாறியது. மாணவ மாணவிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதி  மக்களும் அதிர்ந்த னர். அதிர்ஷ்டவசமாக, குண்டு வீசியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து  தகவல்  அறிந்து விரைந்த கிண்டி போலீசார், வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி, மாணவர்களிடையே அமைதியை ஏற்படுத்தினர். தொடர்ந்து,. சில மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.  திமுக அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தது. மாணவர்களுக்குள் நடந்த மோதலில் கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. குருநானக் கல்லூரியில் குண்டு வீசி மோதலில் ஈடுபட்ட  18 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும், 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த செந்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,  குருநானக் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட விவாகரத்தில், மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசவில்லை, நாட்டு பட்டாசு மட்டுமே வீசியதாக தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். முன் விரோதம் காரணமாக இரு தரப்பு மாணவர்களுக்குள் நடந்த மோதல் எனவும் அதில் இருவர் நாட்டு பட்டாசுகளை கொண்டு வந்து எதிர்தரப்பு மீது வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் மாணவர்கள் வீசியது நாட்டு வெடிகுண்டு என சிலர் பொய்யாக பரப்பி வருவதாகவும், அது வெறும் நாட்டு பட்டாசு என அவர் விளக்கம் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருளை பொதுவெளியில் பயன்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் நான்கு மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளதாகவும், அதில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு மீதமுள்ள மூன்று மாணவர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் தொடர்ச்சியாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், இதனால் குற்றங்கள் தற்போது குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த சமரசமும் கிடையாது என  கூறிய சின்ஹா, மற்ற கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை பார்த்து தாக்குதல் நடத்துகின்றனர். மாநிலம் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கியது தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி நேரங்களில் காலை மாலை என பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், அட்டகாசத்தில் ஈடுபடும் வழி தடங்களையும் கண்டறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு வருடத்திற்கு பேருந்துகளில் மேலே ஏறி அட்டகாசம் செய்யும் செயல்களும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.