சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால், அதுதொடர்பான நோய்களால், கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 11000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், ரூ.1 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சென்னையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதன்மூலமே, சென்னைவாசிகளின் உடல்நலனைப் பாதுகாக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால், மருத்துவர்களை அணுகும் சென்னவைாசிகளின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்துமா மற்றும் சுவாச குறைபாடுகள் தொடர்பான நோய்களைப் பெற்றிருப்பவர்கள், இந்த காற்று மாசுபாட்டினால் மோசமாக பாதிக்கப்படுவோர் பட்டியலில் இருக்கிறார்கள். பலருக்கு, இந்த காற்று மாசுபாட்டினால் தோல் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
இந்த காற்று மாசுபாடு அதிகரிப்பு காரணமாக, சைனஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளோரும், மிக மோசமான பின்விளைவுகளுக்கு ஆளாகும் நிலையில் உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.