சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக அண்ணா நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் வரும் 18-ம் தேதி, 19ந்தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உந்துகுழாயுடன், மவுன்ட் – பூந்தமல்லி சாலையில் சாந்தி காலனி – டிஎல்எஃப் சந்திப்பில் உள்ள பிரதான குழாயை இணைக்கும் பணி நடக்கிறது. இதன்காரணமாக, 18-ம் தேதி காலை 6 மணி முதல் 19-ம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மூலமாகவும், தெருக்களுக்கு லாரிகள் மூலமாகவும் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.