சென்னையின் 384-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின்  உணர்வாய் மாறிய ஒரு வரலாற்று நகரம் குறித்த அரிய தகவல்கள்…

நெட்டிசன்:

 ராஜபாளையம் நகராட்சி ஆணையர், எழுத்தாளர், டாக்டர் திரு.பார்த்தசாரதி அவர்களின் முகநூல் பதிவு….

ன்று சென்னை தொடங்கி 384 வது வருட பிறந்த நாள்.சென்னக்குப்பம்,மதராசுகுப்பம் என்ற இரண்டு மீனவக்குப்பங்கள் வளர்ந்து சிங்காரச்சென்னையாய் இன்று தனது 384 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறது.இடையில் இதன் வளர்ச்சியில் கருப்பர் நகரம்,வெள்ளையர் நகரம் என்று பிரிக்கப்பட்டு வேற்றுமை படுத்தப்பட்டு அவர்களின் காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக கோட்டையின் உள்ளே இருந்த காளிகாம்பாள் தெய்வம் கருப்பரின் பட்டணமான பாரிமுனைக்கு மாற்றப்பட்டது.
அன்றைய நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1809இல் வெள்ளையர்கள் நடத்திய கலகத்தினால் ஏழுகிணறு தோண்டப்பட்டு சென்னையின் குடிநீர் பஞ்சம் தீர்க்கப்பட்டு இது 1947 வரை சென்னையின் குடிநீர் பஞ்சம் தீர்த்தது.நமது மண்ணின் மைந்தர்களின் ஆட்சியில் நீர்நிலைகள் திட்டமிட்ட குடியேற்ற பகுதிகளாக மாற்றப்பட்ட போது தான் தண்ணீர் பஞ்சத்தை சென்னை அனுபவித்தது.
உயர்நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது நாம் அறிந்து இருப்போம்,  384 ஆவது பிறந்த நாள் கொண்டாடினாலும் இன்றும் இளமையாய் கவர்ச்சி கன்னியாய் சென்னை இருக்கிறாள்.பல்லாண்டு காலம் ஏழைகளின் நண்பனாய் இருந்த சென்னை இன்று ஏழைகள் வாழத்தகுதி அற்ற நகரமாக மாற்றப்பட்டு கொண்டு இருக்கிறது. வாழ்க சென்னை.
எனக்கு எந்த பின்புலமும் இல்லை, நான் பெருமை வாய்ந்தவன் இல்லை என்று யாரும் வருந்த வேண்டியதில்லை. இன்று தன்னை நாடி வந்தவர்களை எல்லாம் வாழ் வைக்கும் சென்னையின் பிறப்பே 384 ஆண்டுகள்.அதற்கு முன் அல்லிக்கேணி, திருவொற்றியூர் இது போன்ற பல பூர்வீக கிராமங்களை கொண்டு சென்னைக்குப்பம், மதராசு குப்பம் என்ற மீனவக்குப்பங்கள் ஆங்கிலேயர்களால் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
இதற்கு முன் பூர்வீகப்பெருமை கொண்ட பல்லவர்களின் காஞ்சிபுரம்,சோழர்களின் தஞ்சாவூர்,பாண்டியர்களின் மதுரையை விட சிறப்பு பெற்று வீறு கொண்ட சென்னை போல் நாமும் போராடினால் சாமானியனும் சாதனையாளன் ஆகலாம்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கேற்ப பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் சென்னை போன்ற நகரங்கள் எல்லோரையும் வாழ வைக்கிறது.
உண்மையான சமத்துவ சமுதாயம் சென்னை போன்ற மாநகரங்களில் தான் வாழ்கிறது.
வாழ்க சென்னை! என் வாழ்வின் பெரும்பகுதி உன்னிடம் தஞ்சம் அடைந்தேன். நீ கொடுத்த பெருமையை என்றும் மறவேன்.
வந்தவர்களை வரவேற்று வாழவைத்த சென்னையில் பூர்வகுடிகள் குப்பம்,குடிசை என்று சேரிவாசிகளாக வாழ்கின்றனர். அவர்களும் சென்னையில் தரமாக வாழ வகை செய்வோம்.
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம் !!