1cambridge
சில நல்ல உள்ளங்கள் செய்யும் தன்னலமற்ற சேவை வாழ்வில் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட முடியும் என்பதை ஜெயவேல் எனும் இளைஞனின் உண்மைக் கதை நமக்கு உணர்த்துகிறது.
விவசாயம் பொய்த்துப் போனதால் 80-களில் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்தது ஜெயவேலின் குடும்பம். விதி அவர்களுக்கு இருப்பிடம் கூட தராமல் வீதிக்கு விரட்டியது.  சென்னை கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கியபடி வயிற்றைக் கழுவிக்கொள்ள பிச்சையெடுக்கத் தொடங்கியது இந்தக் குடும்பம். இந்நிலையில் ஜெயவேலின் அப்பா இறந்துவிட, அம்மாவோ முற்றிலும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்.
இரவுகளை பிளாட்பாரங்களில் கழித்த ராஜவேலை போலீஸ் லத்தி பலமுறை பதம் பார்த்திருக்கிறது. ஜெயவேல் எடுத்துவரும் பிச்சைக்காசு அம்மாவின் குடிச்செலவுக்கே சரியாய்ப்போக அவனுக்கு அப்போதே வாழ்க்கை அவ்வளவாய் கசந்திருக்கிறது. இந்நிலையில்தான் “சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட்” என்ற பெயரில் நம்பிக்கை ஒளி அவனை சந்தித்திருக்கிறது.
தங்கள் தொண்டு நிறுவனத்துக்காக ரோட்டோர மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட “பிளாட்பாரப் பூக்கள்” என்ற குறும்படத்தை எடுக்க உமாவும் முத்துராமனும் கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் ஜெயவேலும் பட்டிருக்கிறான், உமாவுக்கும் முத்துராமனுக்கும் அவனைப் பிடித்துப் போகவே, அவனைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பள்ளி அவனுக்கு கசந்திருக்கிறது. ஆனால் அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அபார அறிவு அப்போதே விழித்துக்கொள்ள பள்ளிப் படிப்பு அவனுக்கு மெல்ல மெல்ல இனிக்கத் துவங்கிவிட்டது.
ஜெயவேல் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறவே சில நல்ல உள்ளங்கள் தந்த உதவியுடன் உயர்படிப்புக்கு லண்டனின் கேம்ப்ரிட்ஜுக்கு பறந்தான். அவன் படித்தது ரேஸ்கார்களின் வேகத்தை உயர்த்தும் சிறப்பு பொறியியல் கல்வியாகும். ஜெயவேல் இப்படிப்பை முடிக்க கிட்டத்தட்ட 17 லட்சம் செலவாகியிருக்கிறது. அப்பணத்தை திரட்ட முத்துராமனும் உமாவும் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்போது ஜெயவேலை இத்தாலியில் உள்ள டுரின் பல்கலைக்கு முதுகலை படிப்புக்கு அனுப்ப அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்னும் 8 லட்சம் செலவாகும். ஆனால் ஜெயவேலை எப்பாடு பட்டேனும் அப்படிப்புக்கு அனுப்பியே தீருவது என்பதில் முத்துராமனும் உமாவும் உறுதியாக இருக்கிறார்கள். ஏனெனில் ஜெயவேலை முன்மாதிரியாக வைத்துதான் அப்பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அவர்களது கனவு.
ஜெயவேலின் அம்மா இன்னும் பிளாட்பாரத்தில்தான் இருக்கிறார். ஜெயவேலுக்கு அம்மாவின் மேல் பிரியமிருந்தாலும் அவரது குடிப்பழக்கத்தில் அவனுக்கு சுத்தமாக  உடன்பாடில்லை. ஜெயவேலின் அம்மா தன் மகன் படித்து முடித்து வேலைக்கு வந்தவுடன் அவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முத்துராமன் மற்றும் உமாவின் தாயுள்ளத்தை வணங்கியபடி, ஜெயவேலுக்கு முதுகலைப்படிப்பும் ஜெயமாகட்டும் என்று வாழ்த்துவோம்!