சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக, ஏற்கனவே பாஜக ஐடி விங்கை சேர்ந்த பலர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவிடம் அடைக்கலமான நிலையில், இன்று மேற்கு மாவட்ட பாஜக It wing பொறுப்பாளர்கள் 13 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி பாஜகவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து விலகிய நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில்,  தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார். சில தினங்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று அறிக்கையில் குறிப்பிட்டார். பின்பு சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு, எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து மேலும் பலர் பாஜகவில் இருந்து விலகி வந்தனர்.

இந்த நிலையில், இன்று  பாஜக சென்னைமேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவைச்சேர்ந்த 13 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் ஒரத்தி.அன்பரசு தலைமையில் 10 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2 மாவட்டத் துணை தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சி.டி.நிர்மல் குமார் வழியில் அவருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவிலிருந்து விலகிய 13 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.