டெல்லி: சென்னை பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை, ஆளுநர் குடியரசு தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய நிலையில், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என கூறி குடியரசு தலைவர் முர்மு திருப்பி அனுப்பினார் .

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சென்னை, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது. இது போன்று பல்வேறு சட்ட மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 க்கு மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதாக்களை கடந்த 2023ம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர். இதில் சென்னை பல்கலைக்கழக சட்ட மசோதாவை 2 ஆண்டுகள் குடியரசு தலைவர் நிலுவையில் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இந்த மசோதாக்கள் 2023ம் அண்டு நவம்பர் 19ந்தேதி அன்று சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பதினைந்தாவது சட்டப்பேரவையில் ஆய்வு செய்து, நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், 16-வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நெடுநாட்கள் வைத்திருந்து, நவ.13-ம் தேதி எந்த காரணமும் குறிப்பிடாமல் ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக மசோதாக்களில் குறிப்பிட்டு ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல என்று இப்பேரவை கருதுகிறது.
அரசமைப்பு சட்டப்படி, இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு இசைவு அளிக்க வேண்டும் என்பதை இந்த அவை கவனத்தில் கொள்கிறது. எனவே, 2020 ஜன.9-ல் நிறைவேற்றப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழக சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மசோதா, 16-வது சட்டப்பேரவையில், 2022 ஏப்.25-ல்நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்ட மசோதா, மே 10-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களின் திருத்தச்சட்ட மசோதாக்கள், அக்.19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம், இரண்டாம் திருத்த மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு ஏப்.21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் ஆகிய மசோதாக்களை சட்டப்பேரவை விதி 143-ன் கீழ் பேரவை மறுஆய்வு செய்ய இந்த பேரவை தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.