சென்னை: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை  அதிவேக சாலையாக மாற்ற  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் போது, சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் சென்னை – சேலம் அதிவிரைவு சாலைக்கு அடுத்ததாக, சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு  வர உள்ளது.

மத்தியஅரசு கடந்த ஆகஸ்டு மாதம், நாடுமுழுதும் பெரு நகரங்களை நான்குவழி, ஆறு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் 935 கி.மீ. தொலைவிற்கு ரூ. 50 ஆயிரத்து 655 கோடி மதிப்பில் தேசிய விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கான  ஒப்புதலை நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அளித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினமும் 4.42 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாயப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  முடிவு செய்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், சாதாரண நாட்களிலேயே இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது.  இதையடுத்து அந்த சாலையை அதிவேக 8வழி சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சாலையானது,  சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து  தொடங்கி திருச்சி வரை செல்கிறது.  இது, ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.     இதனைத்தொடர்ந்து தற்போது பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வரையில் 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.  இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அடங்கும்.

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, பூர்வாங்க பணியாக, சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரித்து வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  த்திட்டத்தை தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அரசின் அனுமதியை பெற்று விரைவில் கட்டுமானப்பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விரைவு சாலை தமிழ்நாட்டின் 3 முக்கிய நகரங்களை மட்டும் அல்லாமல் 3 முக்கிய தொழில் நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த விரைவுசாலை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான ஊக்குவிப்பாக அமையும், இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம், ஏற்கனவே நடைபெற்று வரும் சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டத்தின் ஒரு நீட்சியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.