அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரன்புரா பகுதியில் உள்ள பிரதிக்ஷா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தருண் சர்மா. 26 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த வாழ்க்கையை எதிர்நோக்கி வெளிநாட்டில் குடியேற முடிவு செய்தார். இதற்காக சென்னையை சேர்ந்த விசா கன்சல்டன்சி நிறுவனத்தை நாடினார்.

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்று தரப்படும் என்று உறுதியளித்த அந்நிறுவனம் ரூ. 4 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. பின்னர் இதை ரூ. 3 லட்சத்தில் முடித்து தருவதாக அ ந்நிறுவன உரிமையாளர்கள் ராஜேஷ், மீரா முருகன் ஆகியோர் உறுதியளித்து பெற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ராஜேஷ், மீரா முருகன் ஆகியோரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.

இதற்கிடையில் மரியோ கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்து ஜூலை மாதம் ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் விசா விண்ணப்பம் இந்த மாத இறுதியில் பூர்த்தி செய்யப்படும். பாஸ்போர்ட்டை கொண்டு வந்து அலுவலகத்தில் கொடுக்கவும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ராஜேஷ், மீரா முருகன் ஆகியோர் தங்களது அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்னையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து சென்னை போலீசில் புகார் செய்தார்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் அகமதாபாத் கட்லோடியா போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே. சிங் தலையிட்டதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தருண் போல் பலரை அந்நிறுவனம் ஏமாற்றியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் ரூ. 50 கோடியை சுருட்டிக் கொண்டு இருவரும் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அகமதாபாத் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.