அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை,
செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர். கேரளப் பாரம்பரிய முறைப்படி பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த 18 படிகளைக் கடந்து சென்றால் கண்குளிரும் வகையில் அமர்ந்துள்ள சாஸ்தாவை தரிசனம் செய்யலாம். கேரளா சபரிமலை தோற்றத்தைப் போல் உள்ளதால் இவ்வாலயத்தை வடசபரிமலை என்று அழைக்கின்றனர். கடும் விரதமிருந்து, பஜனைகள் பாடி, அன்னதானமிட்டு, இருமுடி கட்டி யாத்திரை மேற்கொண்டு சபரிமலைக்குச் சென்று ஐயப்ப தரிசனம் செய்வதுபோலவே, ராஜா அண்ணாமலை ஐயப்பன் கோயில் ஐயனைத் தரிசிக்கவும் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். பஜனைப் பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்குகின்றனர். இருமுடி கட்டிக்கொண்டு, கோயிலுக்கு வந்து, இவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 18 படிகளில் ஏறி, ஸ்வாமியைத் தரிசித்து செல்கின்றனர். இருமுடி இன்றி வருகிறவர்களுக்கெனத் தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன.
ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயம், வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்திருக்கிறது. கார்த்திகை மாதம் துவங்கி மண்டல பூஜை, பிரம்மோத்ஸவம் என விழாக்களுக்குக் குறைவே இல்லை. கார்த்திகை மாதம் துவங்கியதுமே, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர். 40 அடி உயரக் கொடிமரமும், சுமார் 1,500 பேர் அமர்ந்து தரிசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான தியான அறையும் கொண்ட ஆலயம் இது. இங்கு சபரிமலையைப் போன்றே கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன், நாகராஜ சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் அமைந்திருப்பது சிறப்பு.
திருவிழா:
மகரஜோதி, கார்த்திகை வழிபாடு, தை மாதம் 1 –ஆம் தேதியான மகர ஜோதித் திருநாளில், உத்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக – அலங்காரங்கள் செய்து, 18 படிகளில் தீபமேற்றி பூஜைகள் நடைபெறும்.
வேண்டுகோள்:
நினைத்த காரியம் நிறைவேற, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற, நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இங்குள்ள ஐயப்பனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்