சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, கொரட்டூர் பகுதியில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது பரவலாக தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலை எங்கும் தேங்கி உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள மிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததைத் தொடர்ந்து, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல், அங்க வசிப்பவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். சென்னை பெருமாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய அந்தப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகள், இந்த பகுதியில் இருந்து தண்ணீரை வெளி யேற்றவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பொதுமக்களை பார்வையிடவோ , எங்களுக்கு உதவிக்கரம் நீட்டவோ, எந்த அரசியல் கட்சிகளும், ஒரு அரசு அலுவலர்கள்கூட வரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.