சென்னை: 10ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலத்தால் சென்னையில் மழைநீர் தேங்குகிறது என இன்று சென்னையில் மீண்டும் செய்து வரும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என்றும் கூறினார்.

சென்னையில் நேற்று பெய்த திடீர் கனமழையால் சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டது. சுரங்கங்களிலும் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் போக வழியின்றி பல மணி நேரம் கொட்டும் மழையிலும் காத்திருந்த அவலம் அரங்கேறியது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று திருச்சியில் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரவு சென்னை திரும்பியதும்,  கனமழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சேரில் சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து,  சென்னை ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் பல பகுதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரது வீடு அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் உள்பட கோட்டைக்கு வரும் பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், சென்னை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குபதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில், சென்னை குட்டிச்சுவராக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் மழைநீர் தேங்குகிறது. அடுத்த பருவமழைக்குள் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், சென்னையில் இன்று மாலைக்குள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றவர், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியவில்லை. யூனியன் அரசாங்கத்துடன் முன்னறிவிப்பு அமைப்புகளை மேம்படுத்துவது பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  வானிலை கணிப்புகளையும் மீறி நேற்று பெருமழை கொட்டி தீர்த்துள்ளதாகவும்,  எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக  கூறியுள்ளார்.. கனமழை செய்தி அறிந்து,  திருச்சியில் இருந்து திரும்பிய தான், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு சென்றதாகவும், அங்கு எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதோடு,  நிலைமையை விரைந்து சீர்செய்யவும் அறிவுறுத்தியதாகவும்,  நிலைமை சீராகும் வரை, பொதுமக்கள்  கவனமுடன் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும், மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்வதாகவும் அறிவுறுத்தி உள்ளார்.

சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்.