சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தீபாவளியை முனனிட்டு கடந்த வாரம் கைத்தறி மற்றும் பட்டுப் புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புடவைகளில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள 10 பட்டுப் புடவைகள் அக்டோபர் 28 அன்று மாயமானது தெரியவந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் கண்காட்சிக்கு வந்திருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு உரியவகையில் செயல்பட்டது தெரியவந்தது.

பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த அந்த 7 பெண்களும் யாருக்கும் தெரியாமல் புடவைகளை சுருட்டியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அடையார் உதவி ஆணையர் நெல்சன் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புடவை திருடும் கும்பல் என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அன்றிரவே ஆந்திர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விஜயவாடாவைச் சேர்ந்த புடவை திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் ஆந்திர போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புடவைகள் அனைத்தும் மீட்கப்பட்டு சென்னை காவல்நிலையத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள புடவைகளைத் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த அந்த 7 பலே பெண்மணிகள் யார் என்ற விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

  • நன்றி தி இந்து