சென்னை விமான நிலையத்தை சுற்றி லேசர் விளக்கு, வெப்ப காற்று பலூன் பறக்க விட விதிக்கப்பட்ட தடை மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள், ஓடுபாதையில் தரை இறங்குவதற்கு தாழ்வாகப் பறக்கும் போது விமானத்தை நோக்கி லேசர் லைட் ஒளி அடிப்பது அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த லேசர் லைட் ஒளி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட நிறங்களில் திடீர் திடீரென ஒளிரச் செய்யப்படுகிறது. இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்த லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது பாய்ச்சும் போது, அது விமானியின் கண்களை நோக்கிப் பாய்வதால், விமானி ஒரு சில வினாடிகள் விமானத்தை இயக்குவதில் திணறும் நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற லேசர் லைட் ஒளி பரங்கிமலை, நந்தம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் பகுதியிலிருந்து அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வந்த லேசர் லைட் ஒளி சென்னை சேப்பாக்கம் பகுதியிலிருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 30 முதல் நவம்பர் 28 வரை சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் லேசர் ஒளிகற்றை விளக்குகள், வெப்பக்காற்று பலூன்கள், ஒலி உமிழும் பொருட்களை பறக்கவிட தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த தடை உத்தரவை நவம்பர் 29 முதல் 2025 ஜனவரி 27 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையின் தடையை மீறி விமானநிலையம், அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளிவிளக்குகளை விண்ணில் பாய்ச்சும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.