சென்னையில் அதிகரித்து வரும் போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க மாநகர காவல்துறை புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளது.

சென்னையில், குறிப்பாக வடசென்னையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் போதை பொருள் மற்றும் போதை ஊசி கலாச்சாரத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் அடிமையாகி வருகிறார்கள்.

இதன் காரணமாக வடசென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 28 நாட்களில், 87 வழக்குகள் பதிவு செய்து, 134 சந்தேக நபர்களை கைது செய்த சென்னை போலீசார், கிட்டத்தட்ட 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை மாத்திரைகளை சப்ளை செய்ததாக வெவ்வேறு வழக்குகளில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்ததன் மூலம் சென்னையில் கொக்கைன் போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

போதை மருந்து அல்லது போதை ஊசி காரணமாக இறந்தவர்கள் குறித்த விவரம் தெரியவரும் போது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக மருத்துவ கூராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் சிறுநீர், மற்றும் இரத்த மாதிரிகள் மற்றும் உள்ளுறுப்புகளை தாமதமின்றி உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்புவதன் மூலம் அவர்களின் உடலில் செலுத்தப்பட்ட மருந்தின் இரசாயனக் கூறு கண்டறியப்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள காவல்துறை உயரதிகாரிகள், இதன்மூலம் இளைஞர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், போதை ஊசி பழக்கத்திற்கு ஆளான நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் இருந்து மேலதிக விவரங்களை சேகரிப்பதன் மூலம் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (வடக்கு) அஸ்ரா கர்க், போதை ஊசி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் வழங்குதல் சட்டம் IPC 304-II (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களை போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்று கூறிய அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

மேலும், உ.பி., பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் சப்ளை செய்யப்படும் போதை மருந்துகளை கண்காணித்து பறிமுதல் செய்ய அம்மாநில காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கார்க் கூறினார்.