சென்னை புதுப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் உஷா (48). இவர் அணிந்திருந்த 41 கிராம் (சுமார் 5 சவரன்) எடையுள்ள தாலி சங்கிலி திருடு போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த எழும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தலைமையிலான காவலர்கள், காலை 7 முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கு மருத்துவ சேவைக்காக இயங்கி வரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து மதியம் 3 மணியளவில் அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரியும் உஷா கண் அயர்ந்துள்ளார்.

உஷா கண் அயர்ந்த சமயம் பார்த்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி செயினை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்யும் நபர்களில் ஒருவர் தான் இதனை திருடியிருக்க வேண்டும் என்பது உறுதியானது.

அந்த தங்க சங்கிலி குறித்து அடகு கடை உள்ளிட்ட வேறு இடங்களுக்கு வரும்போது அதை திருடியவர்கள் விவரம் தெரியவரும் அதன்பின் அரசு ஊழியர்களாக இருந்துகொண்டு இதுபோன்ற திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது பணி உள்ளிட்ட அனைத்து நலன்களும் பாதிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறிய ஆய்வாளர் இசக்கி பாண்டியன் மறுநாள் நடைபெறும் விசாரணையின் போது அதனை எடுத்தவர்கள் கொடுத்து விட வேண்டும் அல்லது விசாரணை வேறுமாதிரியாக இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார்.

மறுநாள், விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் அந்த மைய்யத்தில் வேலை செய்யும் 11 பேரையும் ஒருவர் பின் ஒருவராக ஒரு அறைக்குள் அனுப்பி அந்த சங்கிலியை திருடியவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பைக்குள் அதனை போட்டுவிட்டு வருமாறு கூறினார்.

ஏற்கனவே ஆய்வாளர் இசக்கி பாண்டியன் வேறு இரண்டு வழக்குகளில் இதே போன்று நடத்திய விசாரணையில் பலன் கிடைத்ததை அடுத்து அரசு ஊழியர்களான இவர்களிடமும் அதே போன்ற நடைமுறையை பின்பற்றினார்.

ஒருவர் பின் ஒருவராக அறைக்கு சென்று திரும்பிய பிறகு அந்த பையை எடுத்துப் பார்த்ததில் அதில் அந்த தங்க சங்கிலி இருந்துள்ளது.

நூதன விசாரணையில் திருடு போன தங்கச்சங்கிலியை மீட்ட போலீசார் அதனை உரியவரிடம் வழங்கினர்.